சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தல்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சபரிமலை செல்லும் பக்தர்கள், கேரள மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ளும் தமிழக பக்தர்கள், கேரளா அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அதன்படி, சபரிமலை செல்லும் பக்தர்கள் https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றிற்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரண்டாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இணையதளத்தில் முதலில் பதிவு செய்யும் பக்தர்கள் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 10 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. பிபிஎல் கார்டு, ஆயுஸ்மான் பாரத் கார்டு ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

நெய் அபிஷேகம், பம்பை ஆற்றில் குளித்தல், சன்னிதானத்தில் இரவு தங்குவது, பம்பை, கணபதி கோயிலுக்கு செல்வது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எருமேலி மற்றும் வடசேரிக்கரை ஆகிய இரண்டு வழிகளில் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள், எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in