

தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க உச்சநீதி மன்ற வழிகாட்டுதலை பின்பற்றி, தமிழக அரசு நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி, தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மீறி பட்டாசு வெடித்தால், காவல் துறை மூலம் வழக்கு பதியப்படும். இதனால், பொதுமக்கள் பட்டாசு வாங்குவதில் ஆர்வம் செலுத்தவில்லை.
இதுகுறித்து பட்டாசு வியாபாரிகள் கூறும் போது, ‘தீபாவளி பண்டிகைக்காக 15 நாட்களுக்கு முன்பே பட்டாசு கடைகள் போடப்படுவது வழக்கம். ஆண்டுக்கு ஆண்டு பட்டாசு வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கரோனா தொற்று பரவலும், அரசின் நேரக்கட்டுப்பாடு விதிமுறை பின்பற்றி இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளித்துள்ளதாலும், பட்டாசு விற்பனை மந்தமாக உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு 50 சதவீதம் பட்டாசு விற்பனை குறைந்துள்ளது,’ என்றனர்.