

கரோனா தொற்றை கண்டறிய மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் வைராலஜி ஆய்வகத்தில் 5 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கரோனா தொற்றைக் கண்டறிய ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை செய்யப்படுகிறது. இத்தொற்று பரவத் தொடங்கியபோது, தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வைராலஜி ஆய்வகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடங்கப்பட்டது. தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கரோனா அறிகுறி நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதையடுத்து வைராலஜி ஆய்வகத்தில் இரவு, பகலாக பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. தற்போது இந்த ஆய்வகம் மாநிலத்திலேயே மிக அதிக அளவாக 5 லட்சம் மாதிரிகளை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துள்ளது. வைராலஜி ஆய்வகத்தில் பணிபுரிவோருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணி பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து சங்குமணி கூறியதாவது: மாநில அளவில் மதுரை மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில்தான் அதிக அளவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், முதுநிலை மாணவர்கள், ஆய்வக நுட்பநர்கள், உதவியாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் அடங்கிய குழு கடந்த மார்ச் 25 முதல் இன்றுவரை 24 மணி நேரமும் அயராது திறம்பட பணியாற்றி வருகிறது. இந்த ஆய்வகத்தில் நாளொன்றுக்கு 4,800 மாதிரிகளைப் பரிசோதனை செய்யும் வசதி உள்ளது.
மாநிலத்திலேயே முதல் முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரிதான் கரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமும், இணை யதளம் மூலமும் உடனுக்குடன் வெளியிட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.