

பண்ணைகளில் வளர்க்கப்பட்ட கோழிகளை எடுத்துச் செல்வதை தடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகப் பண்ணைக் கோழி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் லட்சுமணன் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் விவசாயிகள் பண்ணை அமைத்து பிராய்லர் கோழி வளர்க்கும் தொழிலை 25 ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர். இந்த பண்ணைகளில் தனியார் நிறுவனம் வழங்கும் குஞ்சுகளை 40 நாட்கள் வளர்த்து கோழியாக வழங்க வேண்டும். சமீபத்தில் கோழிப் பண்ணை தொழில் செய்து வரும் விவசாயிகள் குஞ்சுகள் வளர்க்கக் கூடுதல் கட்டணம் கேட்டு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து சிலர் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பது, விவசாயிகளை தொழில் செய்ய விடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கோழிக் குஞ்சுகள், வளர்க்கப்பட்ட கோழிகள் உணவு இன்றியும், நோய் பாதித்தும் இறக்கும் நிலை உள்ளது.
எனவே, பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை எடுத்துச் செல்வதையும், குஞ்சுகளை வளர்க்கக் கொண்டுச் செல்வதையும் தடையின்றி மேற்கொள்ள போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜெ.நிஷா பானு முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை எடுத்துச்செல்ல தடை ஏற்படுத்தாமல் இருக்க போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மனு தொடர்பாக மதுரை, தேனி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.