நிலுவைத் தொகை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நிலுவைத் தொகை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published on

தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 2015 -2016 மற்றும் 2016 -2017-ம் ஆண்டுகளில் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.450 வீதம் என மொத்தம் ரூ. 27.50 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இதை வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் 60 நாட்களில் நிலுவைத் தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மாநில அரசு 2019 -2020-ம் ஆண்டில் அறிவித்த ஊக்கத்தொகையான டன்னுக்கு ரூ. 137.50-ம் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, இந்த நிலுவைத் தொகைகளை தீபாவளிக்குள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், கரும்பு உற்பத்தியாளர் கள் சங்கத் தலைவர் பி.ராமசாமி, செயலாளர் தோழகிரிப்பட்டி பி.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கையில் கரும்புகளை ஏந்தி கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in