

திருச்செந்தூர் செந்திலாண்டவர் சுவாமி கோயிலில் நவம்பர் மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி தலைமை வகித்தார்.உதவி ஆணையர்கள் வே.செல்வராஜ், சு.ரோஜாலி சுமதா, தக்கார் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் சார்பில் சு.வேலாண்டி, இரா.மோகன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப் பணிக்குழுவினர் மற்றும்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில் நிரந்தர உண்டியல்களில் ரூ.1 கோடியே 66 லட்சத்து 76 ஆயிரத்து 458, கோசாலை உண்டியலில் ரூ.69,506, யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.16,594 என, மொத்தம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 62 ஆயிரத்து 558 வசூலாகியுள்ளது. மேலும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 70, தங்கம் 1550 கிராம், வெள்ளி 12,608 கிராம், பித்தளை 23,600 கிராம், செம்பு 5,500 கிராம் ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.