

மதுரை அழகர் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இந்நிகழ்ச்சி யூ-டியூப்பில் ஒளிபரப்பு செய்யப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: அழகர்கோவில் மலையில் உள்ள ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில், கந்த சஷ்டி திருவிழா நவ.15-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, சூரசம்ஹாரம் முடியும் வரை கோயில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருப்பர்.
இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக அரசு அறிவுறுத்தல்படி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நடைபெறும். சூரசம்ஹாரம் முடிந்து சுவாமி இருப்பிடம் சேர்ந்த பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
கந்த சஷ்டி நடக்கும் ஏழு நாட்களும் கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருத்தல், அன்னதானம், பிரசாதம் வழங்குதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. சூரசம்ஹார நிகழ்வுகள் கோயிலின் யூ-டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.