

மேட்டூர் உபரிநீர் திட்டத்தை விளை நிலங்களில் குழாய் பதித்து செயல்படுத்தாமல், ஓடைகள் வழியாக செயல்படுத்த வலியுறுத்தி, விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரபங்கா வடிநிலத்தில் உள்ள மேச்சேரி, நங்கவள்ளி, சங்ககிரி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வறண்ட 100 ஏரிகளில் காவிரி நீரை நிரப்ப ரூ.565 கோடி மதிப்பில் மேட்டூர் உபரிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல விளைநிலங்களில் குழாய் பதிப்பதை கைவிட்டு நீர் ஓடைகள் வழியாக கொண்டு செல்ல வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து விவசாயிகள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பொன்னுசாமி, செயலாளர் ராமமூர்த்தி, துணைத் தலைவர் தங்கவேலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு திரளாக செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்தனர். இதை கண்டித்து ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு விளைநிலங்களில் குழாய் பதிப்பது தொடர்பாக அக்டோபர் 15-ம் தேதி விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கி, 60 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், காலக்கெடு முடியும் முன்னர் மிரட்டி நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உபரிநீர் திட்டத்தை நீர் ஓடை வழியாக செயல்படுத்த வேண்டும்” என்றனர்.
தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சேலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் நேரடியாக வந்து மனுக்களைப் பெற்றனர். அதன்பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.