

மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய பணியாளர், தொழிலாளி உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கோட்டப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கமல்ராஜ் (31). இவர் கடந்த 7 ஆண்டுகளாக கோட்டப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு பூந்தமல்லி (28) என்ற மனைவியும், ராஜ்கமலி (3) என்ற மகள், சுகேந்திரன் (1) என்ற மகன் உள்ளனர். கோட்டப்பட்டி கூட்டுறவு பால் சேகரிப்பு மையம் அருகே உள்ள மின் கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதை மாற்றும் பணியில் நேற்று மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். கம்பம் மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் 3 மின் கம்பிகள் கம்பங்களில் இழுத்துக் கட்டப்பட்டன. 4-வது கம்பியை கட்டும் பணியில் கமல்ராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது, கவனக்குறைவாக, பணியாளர் ஒருவர் மோட்டூர் பகுதியில் அமைந்துள்ள மின் மாற்றியை இயக்கியுள்ளார். இதில், மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்து கமல்ராஜ் தூக்கி வீசப்பட்டார். கோட்டப்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்த கோட்டப்பட்டி போலீஸார் கமல்ராஜின் உடலை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் என்கிற ஜேம்ஸ் (66). எலக்ட்ரீஷியனான இவர் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடையில் கடந்த மாதம் 29-ம் தேதி மின்சார பல்புகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.