கோழிப் பண்ணையில் வெங்காயம் பதுக்கல்:உரிமையாளர்கள் உட்பட 5 பேர் கைது

கோழிப் பண்ணையில் வெங்காயம் பதுக்கல்:உரிமையாளர்கள் உட்பட 5 பேர் கைது
Updated on
1 min read

திருச்சியை சேர்ந்த 3 வியாபாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு பெரிய வெங்காயத்தை வாங்கிவந்து பெரம்பலூர் மாவட்டத்தில் இரூர், நாட்டார்மங்கலம், செட்டிக்குளம் உட்பட பல பகுதிகளில் கோழிப் பண்ணைகளில் பதுக்கி வைத்திருந்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி விலை கூடும்போது வெங்காயத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா உத்தரவின்பேரில் திருச்சி உட்கோட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டம் இரூர், கூத்தனூர், சத்திரமனை ஆகிய ஊர்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைத்திருந்த 483 டன் பெரிய வெங்காயத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருச்சி உட்கோட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோழிப்பண்ணை உரிமையாளர்களான இரூர் மணி மகன் முத்துச்செல்வம்(30), கூத்தனூர் அருணாசலம் மகன் ரவிச்சந்திரன்(32), சத்திரமனை அழகேசன்(64), நடராஜன் (54) மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட இரூர் சிதம்பரம் மகன் வீரமணி(31) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். மேலும், திருச்சியைச் சேர்ந்த 3 வியாபாரிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பறிமுதல் செய்த வெங்காயத்தில் 75 சதவீதம் அழுகிவிட்டதாகவும், மீதமுள்ள 25 சதவீத வெங்காயம் கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in