

தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கி வந்த நகைக் கடனுக்கான வட்டி விகிதத்தை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகரித்ததைக் கண்டித்து மதுரையில் கூட்டுறவுச் சங்கச் செயலர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு நகைக் கடன் வழங்க மத்திய கூட்டுறவு வங்கியிடம் எட்டு சதவீத வட்டிக்கு கடன் வாங்குகின்றன. அதனை கூட்டுறவுச் சங்கங்கள் பத்தரை சதவீத வட்டிக்கு நகைக் கடன் வழங்குவதால் இரண்டரை சதவீத வட்டித் தொகை வருவாயாகக் கிடைக்கிறது. இத்தொகை, பணி யாளர்களின் ஊதியத்துக்கு கூட் டுறவுச் சங்கங்கள் பயன்படுத்து கின்றன.
இந்நிலையில், மத்திய கூட்டுறவு வங்கி வட்டி விகிதத்தை எட்டிலிருந்து எட்டே முக்கால் என உயர்த்தியது. நகை கடன்களுக்கு பத்தரை சதவீதத்துக்கு மேல் வட்டி வசூலிக்கக்கூடாது என்பதால் கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கிடைக்கும் வட்டி வருவாய் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வட்டி விகித உயர்வைக் கைவிடக்கோரி மதுரை மாவட்ட தொடக்க வேளாண் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் செய லர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் மதுரை மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தை நேற்று முற்றுகை யிட்டனர். மத்திய கூட்டுறவு வங்கிப் பொது மேலாண்மை இயக்குநர் ஜீவாவிடம், மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் அனைத்துப் பணியாளர் சங்க நிர்வாகிகள் ஆசிரியதேவன், ராஜா, கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக நவ. 11-ல் (நாளை) பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து கூட்டுறவுச் செயலர்கள் கலைந்து சென்றனர்.