

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முருகானந்தம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டியில் 2017 முதல் 2020 வரை நடைபெற்ற நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இந்த ஆண்டுக்கான சமூகத் தணிக்கை அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட குறைவான இடங்களிலேயே நூறுநாள் வேலை நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யாதவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இந்தத் திட்டத்தில் அதிகாரிகள் நிதி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். தொழிலாளர்கள் வேலை செய்யாமல் முறைகேடு செய்கின்றனர். இயந்திரங்களை பயன்படுத்தி சில நிமிடங்களில் செய்து முடிக்க வேண்டிய பணிகளை தொழிலாளர்களை பயன்படுத்தி ஏன் மேற்கொள்கின்றனர்? எனக் கேள்வி எழுப்பினர். தமிழக அரசு பதில் தர உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.