

மதுரையில் ஜனார்த்தனன், அருண்குமார், உமா சங்கர், ரமேஷ் ஆகிய நால்வரும் ‘டிஸ்க் அக்ரோ டெக்’ என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிறுவனம் மூலம் மாதாந்திரத் தவணை அடிப்படையில் பொது மக்களிடம் பணம் வசூலித்தனர். இந்நிலையில், முறையான அனுமதியின்றி பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் செபி அமைப்பு அந்நிறுவனத்தை தடை செய்தது. இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், நிதி நிறுவன உரிமையாளர்களான ஜனார்த்தனன் உட்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 3 மாதத்தில் பணத்தை திருப்பி அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி, போலீஸார் அடங்கிய குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே அந்தக் குழுவில் இடம் பெற்றவர்கள் லஞ்சம் கேட்பதாக பொய் தகவல்களை வாட்ஸ் ஆப்-ல் ஜனார்த்தனன் உட்பட 4 பேரும் பரப்பியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.