

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும்பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மழைக்காலத்துக்கு முன் ஸ்மார்ட் சிட்டி பணிகளை முடிக்க திட்டமிடாததால் தூத்துக்குடி மாநகராட்சியில் பல இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
வடகிழக்கு பருவமழை தாமதமானதால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மிகவும் கவலையில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேநேரத்தில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன பேருந்து நிலையமாக தரம் உயர்த்தப்படுகிறது. இதனால் அருகேயுள்ள எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி சகதிக் காடாக மாறியுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மேலும், மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு, வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பல இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள் அவதியடைந்துள்ளனர். மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் டேங்கர் லாரிகள் மற்றும் மோட்டார் மூலம் சாலைகள், தெருக்களில் தேங்கிய மழைநீரை உறிஞ்சி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மி.மீ): திருச்செந்தூர் 22, காயல்பட்டினம் 23, குலசேகரன்பட்டினம் 20, விளாத்திகுளம் 16, காடல்குடி 16,வைப்பார் 29, சூரங்குடி 16, கோவில்பட்டி 29, கழுகுமலை 12, கயத்தாறு 18, கடம்பூர் 44, ஓட்டப்பிடாரம் 40,மணியாச்சி 6, வேடநத்தம் 20, கீழஅரசடி 12, எட்டயபுரம் 32, சாத்தான்குளம் 12, வைகுண்டம் 13, தூத்துக்குடி 46 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் மொத்தம் 426 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியாக 22.42 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரி
நேற்று அதிகபட்சமாக சுருளகோட்டில் 64 மிமீ மழை பதிவாகியிருந்தது. நாகர்கோவிலில் 25 மிமீ,பெருஞ்சாணியில் 18, புத்தன்அணையில் 16, பூதப்பாண்டியில் 12, தக்கலையில் 37, இரணியலில் 47,மாம்பழத்துறையாறில் 11, ஆரல்வாய்மொழியில் 12, கோழிப்போர்விளையில் 58, அடையாமடையில் 49, குருந்தன்கோட்டில் 34, முள்ளங்கினாவிளையில் 40, முக்கடலில் 22 மிமீ., மழை பெய்திருந்தது.
தொடர் மழையால் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில்43.56 அடி, பெருஞ்சாணி அணையில் 69.45 அடி நீர்மட்டம் உள்ளது. இவற்றை பொதுப்பணித்துறை நீர்ஆதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.