திருப்பத்தூர் மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால் உர விற்பனை உரிமம் ரத்து வேளாண் இணை இயக்குநர் ரமணன் எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில்  முறைகேட்டில் ஈடுபட்டால் உர விற்பனை உரிமம் ரத்து  வேளாண் இணை இயக்குநர் ரமணன் எச்சரிக்கை
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என வேளாண் துறை இணை இயக்குநர் ரமணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில், தற்போது 35 ஆயிரத்து 728 ஹெக் டேர் பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், இப்பருவத்துக்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட விவசாயி களுக்காக 1,725 மெட்ரிக் டன் யூரியா, 564 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 2,347 மெட்ரிக் டன் காம்பளக்ஸ் மற்றும் 870 மெட்ரிக் டன் பொட்டாஷியம் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் தற்போது இருப்பு உள்ளது.

45 கிலோ யூரியா மூட்டை ரூ.266-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட உர விற்பனை யாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

விற்பனை உரிமம் ரத்து

அதேபோல, மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை விவசாயி களுக்கு மட்டுமே ஆதார் அட்டை எண் பெற்று சாகுபடி நிலப்பரப்பு மற்றும் பயிர்களுக்கு ஏற்ப வழங்க வேண்டும். உரக்கடைகளில் உள்ள வேலையாட்கள், உரக்கடைகள் நடத்தி வரும் குடும்ப உறுப்பினர்கள், நிலமற்றவர்கள் மற்றும் தகுதியற்ற நபர்களுக்கு ஆதார் அட்டை எண் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளது தெரியவந்தால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உரம் தொடர்பான புகார்களை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரி விக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in