

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மாநில அரசு தயார்நிலையில் உள்ளது என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.
இது குறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பருவ மழையால் பாதிக்கப்படும் பகுதிகள் நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 4,133 பாதிப்புக்கு உள்ளான தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மண்டல குழுக்களை முதல்வர் அமைத்துள்ளார்.
வட கிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. சமூக இடைவெளி கடைபிடிக்கும் வண்ணம் 9,393 பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவோர் 7,39 ,450 பேரைத் தங்க வைக்க முடியும். மேலும் 14,232 பெண்கள் உள்ளிட்ட 43,409 எண்ணிக்கையிலான முதல்நிலை மீட்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் பேரிடர் பாதிப்புகளைத் தவிர்க்கவும், குறைக்கவும் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகளான 6,016 தடுப்பணைகள் கட்டப்பட்டு 11,482 கசிவு நீர்க் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 9,616 ஏரிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளன.
மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, கூடல் புதூர், பனங்காடி உள்ளிட்ட 27 தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.