

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் தணிக்கை செய்யப்படுகின்றனவா என்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சமூக நீதி, கல்வி, பண்பாட்டு மையத்தின் செயலர் பெருமாள், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் இடம் பெற்றுள்ள வசனம் ஆபாசமாகவும், கேட்போர் முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளது. அந்த படத்துக்கான போஸ்டரும் மிகவும் ஆபாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, படத்தை வெளியிட நிரந்தத் தடை விதித்தும், படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், வெளியீட்டாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதிகள் கருத்து
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களும் பல குற்றச்செயல்களுக்கு காரணமாக உள்ளன. பெரும்பாலான கதைகள் தவறான உறவுகளை மையப்படுத்தியே அமைகின்றன. தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்குத் தணிக்கைக்குழு எதுவும் கிடையாதா?
தற்போது மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்கின்றனர். இந்த நேரத்தில் இதுபோன்ற டீசர்கள் குறுக்கிடும்போது வளரிளம் பருவத்தினர் தவறான வழிக்குச் செல்ல வாய்ப்புள்ளது என்றனர்.
இதையடுத்து, யூடியூப், முகநூல், கூகுள் நிறுவனம் மற்றும் இரட்டை குத்து படக்குழுவினர், மத்திய தணிக்கை குழு, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 20-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.