

யூடியூப்பில் ஒரு சேனலை நடத்தி வருபவர் டெல்லியைச் சேர்ந்த கவுரவ் வாசன். கடந்த மாதத் தொடக்கத்தில், டெல்லி மால்வியா நகரில் இயங்கி வரும் பாபா கா தாபா என்ற உணவகத்தையும், அதை நடத்தி வரும் காந்தா பிரசாத் தம்பதி குறித்தும் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார் கவுரவ்.
அந்த வீடியோவில், காந்தா பிரசாத் நடத்தி வரும் சிறிய ஓட்டலில் கரோனா பிரச்சினை காரணமாக யாரும் சாப்பிட வராததால் வருமானமின்றி அவர் தவிப்பதாகவும், அவர் அழுது தவிக்கும் காட்சிகளும் இருந்தன. அந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், அந்த காந்தா பிரசாத் ஓட்டலில் அடுத்த சில நாட்களில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டுச் சென்று சாப்பிட்டனர். மேலும் பொதுமக்கள் பலரும் அந்த உணவகத்துக்கு நிதியுதவி அளித்தனா்.
இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து தங்களுக்கு வந்த லட்சக்கணக்கான நிதியுதவியை, கவுரவ் வாசன் முறைகேடு செய்து ஏமாற்றி தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், காந்தா பிரசாத் சார்பில், டெல்லி தெற்கு மாவட்ட போலீஸ்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து காந்தா பிரசாத் கூறியதாவது:
என்னைப் பற்றியும், ஓட்டலைப் பற்றியும், யூடியூப், ட்விட்டரில் கவுரவ் வாசன் பதிவிட்டார். அப்போது ஏராளமான நிதி குவிந்தது. அவர் எனக்கு அதிலிருந்து ரூ.2 லட்சத்துக்கும் சற்று அதிகமாக என்னிடம் கொடுத்தார். ஆனால் மீதி பணத்தைத் தரவில்லை.
நிதி வந்த கணக்குகள் யாவும், கவுரவ் வாசனுடையதும், அவரது மனைவியுடையதும் ஆகும். இது எனக்கு பெருத்த நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. இவ்வாறு காந்தா பிரசாத் கூறினார்.