

மாநில அரசின் அனுமதியின்றி யாரும், எந்த இடத்திலும் சிலை வைக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான எம்.நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘மாதவரம் அடுத்த கொசப்பூரில் உள்ள எனது பட்டா நிலத்தில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கு அனுமதி கோரி தமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 முறை மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. எனவே, சிலை திறப்பு விழாவுக்கு அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்
இந்த மனு, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தனிநபர்இடங்களில் சிலை வைத்துக்கொள்ள அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்புகளின் நகல்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், தமிழக அரசு தரப்பில், ‘‘தனி நபரின் பட்டா இடத்தில் சிலை வைத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தாலும், அதற்கு மாநில அரசிடமிருந்தும் முறையான முன் அனுமதி பெற வேண்டும். மாநில அரசின் அனுமதியின்றி யாரும் எந்த இடத்திலும் சிலை வைக்க முடியாது. உரியஅனுமதியின்றி சிலை வைக்கக்கூடாது என ஏற்கெனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, ‘‘இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்’’ எனஉத்தரவிட்டு விசாரணையை நவ.26-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.