தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் இயக்கப்படுமா?- பல லட்சம் பயணிகள் எதிர்பார்ப்பு

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் இயக்கப்படுமா?- பல லட்சம் பயணிகள் எதிர்பார்ப்பு
Updated on
1 min read

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என்று பல லட்சம் பேர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல லட்சம் பேரின் பிரதான போக்குவரத்து வசதியாக இருப்பது புறநகர் மின்சார ரயில். கரோனா ஊரடங்குக்கு முன்பு சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு தினமும் 450-க்கு மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவைகள் இயக்கப்பட்டன.

இதில் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், வியாபாரிகள் உட்பட சுமார் 8 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர். சென்னைமற்றும் புறநகர் பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி), வாகன உற்பத்தி மற்றும் இதர தொழிற்சாலைகள் அதிகரித்து வரும் நிலையில், மின்சார ரயில் போக்குவரத்தின் முக்கியத்துவமும் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், கரோனா ஊரடங்கால் பயணிகள் ரயில்சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மின்சார ரயில் சேவையும் கடந்த 7 மாதங்களுக்கு மேலாகநிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் பேர் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த சூழலில்,தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வெளியூர்களுக்கு செல்லவும், பொருட்கள் வாங்கவும் மக்கள் அதிக அளவில் பயணம்செய்வார்கள். எனவே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலாவது மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சில பயணிகள் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் பணிக்கு சென்று வருகின்றனர். தீபாவளி பண்டிகையும் நெருங்குவதால், மக்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகின்றனர்.

சென்னை புறநகரில் இருந்து தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே,கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருவது கஷ்டமாக இருக்கிறது. குறிப்பாக, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே, மின்சார ரயில் சேவையை தொடங்க வேண்டும்’’ என்றனர்.

இதுபற்றி தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பியுள்ளோம். இதுதொடர்பாக ரயில்வே வாரியம் முடிவு செய்து, விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வாரியம் அனுமதித்ததும், பாதுகாப்பு நடைமுறைகளுடன் மின்சார ரயில்களை இயக்க தயாராக உள்ளோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in