

தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கு நிலம் வழங்கியதற்கு, கூடுதல் இழப்பீட்டுத்தொகை வழங்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் நகரில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலம், கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் நிலத்தை கொடுத்த விவசாயிகளுக்கு குறைவாக இழப்பீடு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து, தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் கொடுத்த வாக்குறுதிப்படி கூடுதலாக இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி, நிலம் வழங்கிய விவசாயிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தங்களுக்கு நிவாரணம் வழங்க உறுதி அளிக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் சங்க ஒன்றிய துணைத் தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் முன் னிலை வகித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.