

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள செங்குளம்பாசன விவசாயிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகளை கண்டித்து நேற்று தங்கள் வயல்களில் கருப்புக் கொடி ஏந்தி, அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.
செங்குளம் பாசனத்தில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் நெல், வாழை, பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் நிவாரணத் தொகைகளில் முறைகேடு நடைபெறுவதாகவும், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய விதைகள் மற்றும் நிவாரணத் தொகையை முறைகேடாக கையூட்டு பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்களுக்கு ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்கள் வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதத்தில் செங்குளம் பாசன விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
விவசாயிகளின் கோரிக்கை மற்றும் புகார் குறித்து இதுவரைஎந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று செங்குளம் பாசன விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கருப்புக்கொடி ஏந்தி, அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்குளம் பெரியகுளம் விவசாய சங்கத் தலைவர்முருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுடலைமுத்து, சண்முகவேல், சுடலை குமார், அமிர்தம், சீதை உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.