

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியில் இருந்து, 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத் தேவையைப் பொறுத்து அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது, அதிகரிக்கப்பட்டும் குறைக்கப்பட்டும் வருகிறது.
கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக நீரின் தேவை குறைந்திருந்தது. இதனால், அணையில் இருந்து நேற்று முன்தினம் வரை விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது, டெல்டா மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால், பாசனத்துக்கு தண்ணீர் தேவை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 900 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 8,271 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,113 கன அடியாக சரிந்தது. நேற்று முன்தினம் 100.10 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 99.70 அடியானது. நீர் இருப்பு 64.45 டிஎம்சி-யாக உள்ளது.