

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பசும்பொன் ஒரு சித்தர் பீடம். அங்கு பின்பற்றப்படும் வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஆனால் பசும்பொன்னில் கொடுத்த விபூதியை திமுக தலைவர் தட்டிவிட்டுள்ளார். அவரது செயல் அனைவரையும் வேதனைப்படுத்தி உள்ளது. இதற்காக ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பெண்கள் மற்றும் தலித் மக்களை இழிவாகப் பேசுவோரை ஸ்டாலின் பாதுகாக்கிறார். தேர்தல் நேரத்தில் மக்கள் அவருக்குப் பதிலடி தருவர். தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியவர்களுக்கு பின்னால் திமுக இருக்கிறது. இதில் தொடர்புடையவர்களுக்கு திமுகவின் சட்டப் பிரிவு உதவி செய்து வருகிறது. திமுகவின் முகத்திரையை கிழிக்கவே வேல் யாத்திரை நடத்துகிறோம்.
தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் யாத்திரையைத் தடை செய்ய வேண்டும் என்கின்றனர். தடை விதித்தாலும் வேல் யாத்திரை நடக்கும். வேல் யாத்திரை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மனு தர்மம் என ஒன்று இல்லை. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின்படியே இந்தியா இயங்கி வருகிறது. ஆனால் இல்லாத மனு தர்மத்தைதடை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது வேடிக்கையாக உள்ளது. ஆர்எஸ்எஸ் கூட பல நேரங்களில் மனு தர்மத்தை எதிர்த்துள்ளது என்றார்.
பொன்னார் வலியுறுத்தல்
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியது அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும், மற்றவர்களின் மத நம்பிக்கையை அவமதிக்கக் கூடாது. ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும். பெரியாரைவிட கடவுள் மறுப்பாளர் யாரும் இல்லை. ஆனால், அவரே ஆன்மிக நிகழ்வில் வழங்கப்பட்ட விபூதியை நெற்றியில் பூசிக் கொண்டார்.
அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ரஜினி தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். ரஜினியின் அரசியல் வருகையால் பாதிப்பை சந்திக்கும் கட்சிகள் அவர் தொடர்பான அவதூறு அறிக்கையை பரப்பியுள்ளனர் என்றார்.