

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தரமில்லாத விதைகள் விற்பனை செய்யப்படுவதால், விளைச்சல் பாதிக்கப்பட்டு இழப்புகளை சந்தித்து வருவதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புக்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா. இவர், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள தோக்கப்பட்டி கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம், அப்பகுதியில் உள்ள தனியார் விற்பனை நிலையத்தில், பீர்க்கங்காய் விதைகள் வாங்கி நடவு செய்தார். தரமில்லாத விதைகளால் விளைச்சல் பாதிக்கப்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி ராஜா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘2 ஏக்கர் நிலத்தில் கொடி வகை பயிரின பீர்க்கங்காய் விதை நடவு செய்யப்பட்டு, பந்தல் அமைத்தேன். கொடியில் பூக்கள் பூத்து காய்கள் காய்க்கும் போது, அதன் தன்மை மாறுபட்டு காணப்பட்டது. இதுதொடர்பாக தனியார் விதை விற்பனை நிலையத்துக்கு தகவல் அளித்தேன். நிலத்துக்கு வந்த விதை நிறுவன அலுவலர்கள் சிலவகை மருந்துகளை பரிந்துரை செய்தனர். இதனை தெளித்த பிறகும் பீர்க்கங்காய் வழக்கமான அளவில் இல்லாமல் தரமில்லாமல் விளைந்துள்ளதால், இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்புடைய அலுவலர்கள் விசாரணை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும்,’’ என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் விதை விற்பனை நிலை யங்களில், தரமில்லாத விதைகள் விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு,சூளகிரி பகுதியில் தரமற்ற தக்காளி விதைகளால் தக் காளிப் பழங்கள் வழக்கமான அளவை விட சிறியதாகவும், தரமற்றும் விளைந்தது குறிப் பிடத்தக்கது.