

திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்காக ரூ.4.95 கோடியில் பாதுகாப்பு அறைகள் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. பணிகளை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.
இந்த அறைகளில், திருப்பூர்மாவட்டத்தில் உள்ள தாராபுரம், காங்கயம், அவிநாசி, திருப்பூர் (வடக்கு மற்றும் தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில், தேர்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை கண்காணிப்புக் கேமரா மூலம் பதிவு செய்யப்படுவதையும் நேரில் பார்வையிட்டார்.
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், வட்டாட்சியர்கள் ரவீந்திரன் (தேர்தல்), சிவசுப்பிரமணியன் (பல்லடம்), சுந்தரம் (தெற்கு), பொதுப்பணித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.