

ஓய்வுப் பெற்ற விமானப் படை தலைமை மார்ஷல் பி.எஸ்.தனோவா கூறியதாவது:
நானும் அபிநந்தனின் தந்தையும் நீண்ட நாள் நண்பர்கள். இருவரும் ஒன்றாக விமானப் படை பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தோம். கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது, என்னுடைய விமானப் படை கமாண்டர் அஹுஜா பாகிஸ்தானிடம் பிடிபட்டார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றது. அதேபோல் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டதும், அந்த நினைவு என் மனதில் ஓடியது.
ஆனால், ‘‘சார், அஹுஜாவை நம்மால் மீட்க முடியவில்லை. ஆனால், கண்டிப்பாக அபிநந்தனை திரும்ப பெறுவோம்’’ என்று கூறினேன். தற்போது இந்தியாவின் பலம் என்ன என்பது பாகிஸ்தானுக்கு நன்கு தெரியும். அபிநந்தனுக்கு ஏதாவது நடந்தால், பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டுக்குத் தெரியும்.
அபிநந்தனை விடுவித்ததில் 2 அம்சங்கள் உள்ளன. ஒன்று, தூதரக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள். இரண்டாவது, இந்தியாவின் ராணுவம், கப்பல், விமானப் படை என முப்படைகளின் பலம். ‘அமைதியாக பேசுங்கள்; ஆனால், பெரிய கம்பு எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் அடிக்கடி கூறுவார். இங்கு பெரிய கம்பு என்பது இந்திய ராணுவம்தான். இவ்வாறு தனோவா கூறினார்.