

உலகையே முடக்கியுள்ள கரோனாவால் பலரும் வீட்டில் இருந்தே பணி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். வீட்டிலிருந்து பணிபுரிதல் சில சுமைகளைக் குறைத்திருந்தாலும், மனரீதியாகவும், உடல் சார்ந்து சில பலவீனங்களையும் அதிகப்படுத்தியுள்ளது.
கரோனா சார்ந்த உயிரிழப்புகள் ஒருபக்கம் இருக்க, இளம் வயதில் இதயக் கோளாறுகளால் ஏற்படும் இழப்புகளும், உடல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனவே, நமது உடல் உறுப்புகள் சார்ந்த நலனில் கூடுதல் கவனத்தை இந்தக் கடினமான நாட்களில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அந்த வகையில் உலக பார்வை தினமான அக்டோபர் 8 ஆம் நாளை பார்வையின்மை மற்றும் பார்வைக் குறைபாடு குறித்த விழிப்புணர்வு நாளாக ஒவ்வொரு வருடமும் மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது உலக சுகாதார அமைப்பு.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகில் 4 கோடி பேர் கண்பார்வை இழந்தவர்கள் என்கிறது. உலகில் கண்ணாடி அணிவோரின் எண்ணிக்கை 400 கோடியைத் தொட்டுவிட்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் முதியவர்களைக் கடந்து கண்பார்வை குழந்தைகளையும், இளைஞர்களையும் அதிகம் பாதித்திருக்கிறது. 5 கோடி மக்களுக்கும் மேல் கண்பார்வைக் குறைபாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த நிலையில், ஊரடங்கில் கண் பார்வை சார்ந்த கோளாறுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இதுகுறித்த கவனம் பொதுமக்களிடம் வேண்டும் எனவும் கூறுகிறார் கண் மருத்துவர் ரேணுகா துரைசாமி,
”கரோனாவால் நமக்குப் புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த லாக்டவுனால் நம் குழந்தைகள்தான் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். ஏற்கெனவே நமது குழந்தைகளில் கண்பார்வைக் கோளாறு காரணமாக கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடங்களால் அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
ஒரு குழந்தைக்கு ஆன்லைன் வகுப்பு சுமார் 5 மணி நேரத்துக்கு நடைபெறுகிறது. மேலும் சிலருக்கு டியூஷன்களும் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக அவர்களது கண்கள் வறண்டு விடுகின்றன. இதனால் கண் எரிச்சல் ஏற்படுகிறது. அவர்களுக்குப் பாடத்தில் கவனமின்மை ஏற்படுகிறது.
எனவே, பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ச்சியாக நடத்தாமல் குறிப்பிட்ட இடைவெளிகளில் நடத்தலாம். இதனால் குழந்தைகளின் கண்களுக்கு ஓய்வு கிடைக்கலாம். 10 வயதுக்குக் குறைவாக இருப்பவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதைப் பள்ளி நிர்வாகம் தடுக்கலாம்.
ஆன்லைன் வகுப்புகள் மட்டுமல்லாது தற்போது வெளியே சென்று விளையாட முடியாத காரணத்தால் குழந்தைகள் 3 மணி நேரத்துக்கு மேலாக ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இதன் காரணமாக கண்களின் பார்வைத் திறன் பாதிக்கப்படலாம். எனவே, குழந்தைகளின் கண்களுக்கு ஓய்வை அளிக்க வேண்டும். இதனைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கண்களில் பாதிப்பு ஏற்படுவதுடன் குழந்தைகள் மனரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக அவர்களது வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஏற்படும்.
குழந்தைகள் இவ்வாறு பாதிக்கப்பட, இதுமட்டுமின்றி வீட்டிலிருந்து பணிபுரியும் பெரியவர்களும் கண்சார்ந்த பதிப்புகளுக்கு அதிகம் உள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக மானிட்டர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 30 நிமிடத்துக்கு ஒருமுறை கண்களுக்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். தொடர்ந்து கணினியைப் பார்த்துக் கொண்டிருந்தால் நிச்சயம் தலைவலி மற்றும் சில பாதிப்புகள் ஏற்படும். மேலும் கண்களிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.
எனவே, கண்களுக்கான ஓய்வை நாம் நிச்சயம் அளிக்க வேண்டும். இந்த ஊரடங்கில் தலைவலி மற்றும் கண்கள் வறண்டு போகும் பிரச்சினை காரணமாக மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, எவ்வளவு வேலைப்பளு இருப்பினும் கண்களுக்கு ஓய்வு அளிப்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு அதிகரிக்கும் போதும், ரத்த அழுத்தம் அதிகமாகும்போதும் கண்களில் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. இவ்வாறான நேரங்களில் கண் மருத்துவரை அணுகுவது நல்லது.
8 மணி நேரமாவது எந்தத் தொந்தரவுக்கும் நம்மை நாம் ஆட்படுத்திக் கொள்ளாமல் நமது உடலுக்கும், நமது கண்களுக்கும் போதிய ஓய்வை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
சத்தான உணவுகளை உட்கொண்டு, கண்ணுக்குத் தேவையான ஓய்வை அளித்துப் பார்வையில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்போம்.