

தீவிரவாத வழக்குகளில் கைதான அனைவருமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரின் நவாடா தொகுதி வேட்பாளர் கிரிராஜ் சிங் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசும்போது, மோடியை எதிர்த்து விமர்சிப்பவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் இடமில்லை என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சுக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அவர் இன்று பாட்னாவில் நிருபர்களிடம் பேசும்போது, "தீவிரவாதம் என்பது நம் நாட்டின் பிரச்சினை. தீவிரவாத வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்படும்போது, தங்களை மதச்சார்பற்றத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மவுனம் காப்பது ஏன்?
அந்தக் குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள அனைவரையும் தீவிரவாதிகள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வைத்து வாக்கு வங்கி அரசியலை நடத்துவது நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்" என்றார் கிரிராஜ் சிங்.
முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட கிரிராஜ் சிங் மீது பிஹார் மற்றும் ஜார்கண்ட் போலீசார் மூன்று வழக்குகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.