

30 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்காக பாஜகவுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ள்ளார்.
பிரதமராக பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு ராமதாஸ் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில்: "இந்தியாவில் நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றமைக்காக நான் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பதவியேற்க இருப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்குக் காரணமான இந்த மிகப்பெரிய வெற்றியை கட்டி எழுப்பியவர் நீங்கள் தான்.
குஜராத் மாநிலத்தில் எட்டப்பட்டது போன்ற வளர்ச்சி தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பயனளிக்கும் என்பதை இந்திய மக்கள் நன்றாக உணர்ந்திருப்பதால், உங்களிடமிருந்து அவர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் நமது கூட்டணி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்ற போதிலும் இரு தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் நமது கூட்டணியின் எதிர்காலத்திற்கு இது வகை செய்யும். தமிழகத்தின் நலன் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகளையும் தாங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்". இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.