

அரசு அன்றாடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் தகவல்களைத் தாண்டி செவிவழி செய்தியாக வரும் மதுரை ‘கரோனா’ நிலவரம் தகவல்கள் அச்சம் கொள்ள வைக்கிறது. அத்தகைய தகவல்கள் மதுரை மக்கள் தங்களைத் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள அடுத்த 15 நாட்கள் மிக முக்கியம் என்று உணர வைக்கிறது.
இதேபோல் நோய்த் தொற்று அதிகரித்தால் சிக்கல்தான். மதுரை அரசு மருத்துவமனை ‘கரோனா’ வார்டுகள் நிரம்பிவிடும். மருத்துவக்குழுவினர் நெருக்கடிக்கு ஆளாவார்கள். சிகிச்சை, கவனிப்பு தற்போது போல் இருக்குமா? என்று சொல்ல முடியாது. இதனால், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
‘கரோனா’ பரவிய ஆரம்பத்தில் இந்த தொற்று நோய் மதுரையை மிரட்டியது. தமிழகத்திலேயே இந்த நோய்க்கு மதுரையில்தான் முதல் உயிரிழப்பு நடந்தது. விரைவாக 2 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
சென்னைக்கு இணையாக மதுரையில் தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதும் மதுரையில் ‘கரோனா’ பாதிப்பு அப்படியே குறையத்தொடங்கியது. அதற்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் எடுத்த நடவடிக்கைகள் முக்கியமானது. அதேபோல், மாநகர மற்றும் புறநகர் போலீஸாரும் தூக்கமில்லாமல் சாலைகளில் வருவோர், செல்வோரை வழிமறித்து அறிவுரை வழங்கியும், எச்சரித்தும் அனுப்பினர்.
‘கரோனா’ அச்சத்தால் யாரும் வெளியே வரத் தயங்கிய அந்த நேரத்தில் தன்னார்வலர்கள் எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் அரசு அதிகாரிகளுடன் வீதிகளில் இறங்கி பணிபுரிந்தனர். இப்படி பலரின் கூட்டு முயற்சியின் பலனாக மதுரையில் ‘கரோனா’ கட்டுக்குள் இருந்தது.
ஆனால், கடந்த 1-ம் தேதி ஊரடங்கு தளர்விற்குப் பிறகு மதுரையில் கரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சென்னை, மகாராஷ்டிரா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வந்தவர்களுக்குக்கூட முழுமையான பரிசோதனை நடத்தப்படவில்லை. கண்காணிப்பும் இல்லை.
இ-பாஸ் கிடைக்காதவர்கள் சென்னையில் இருந்து சாலை வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அந்த வகையில் மதுரை மாவட்டத்திற்குள் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இ-பாஸ் பெறாமல் வந்ததால் இவர்கள் பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகத்தால் கண்டறிய முடியவில்லை. அதற்குள் இவர்கள் பொதுவெளியில் உலாவ ஆரம்பித்துவிட்டனர். தற்போது இவர்களில் தொற்று உள்ளவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. அதன்பிறகே தற்போது இ-பாஸ் பெற்று வருகிறவர்கள். பரிசோதனைக்கு பிறகே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த நடைமுறை வருவதற்குள்ளே மதுரையில் ஏற்கெனவே வந்தவர்களில் தொற்று இருந்தவர்கள் மூலம் ‘கரோனா’ பரவிவிட்டது. ஊரடங்கு தளர்வும் செய்யப்பட்டுவிட்டதால் ஸ்கூல், கல்லூரி, மால், தியேட்டர்களைத் தவிர மதுரையில் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் திறந்துவிட்டவிட்டன.
அதனால், ‘கரோனா’ பரவல் அதிகரித்து தற்போது அதன் பாதிப்பு தெரிய ஆரம்பித்துள்ளது. இன்னும் 10 நாட்களுக்கு தொற்றின் வீரியம் தெரியும். அதற்கு ஏற்றார்போல் 8-ம் தேதி முதலே மதுரையில் ‘கரோனா’ தொற்று வேகம் தெரிய ஆரம்பித்துள்ளது. கடந்த 10-ம் தேதி 10 பேருக்கும், 11-ம் தேதி 19 பேருக்கும், நேற்று 12-ம் தேதி 31 பேருக்கும் ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 15 பேருக்கு ‘கரோனா’வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் அனைத்தும், அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல். ஆனால், பின்னணியில் தொற்று கண்டறியப்படுவோர் ஏராளமானோர் மறைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது தேவைப்படக்கூடிய அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டும் பரிசோதனையை நடத்தாமல் அதிகாரமையத்தில், அரசியல் பின்புலத்தில் இருக்கும் அறிகுறி இல்லாதவர்களுக்கும் பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ முடிவுகளைக் கூடுதலாக காட்ட பரிசோதனைகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் பரிசோதனை தேவைப்படும் அறிகுறியுடன் இருப்பவர்களுக்கு உடனுக்குடன் நடத்தப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்னும் 10 நாட்கள் இதுபோல் 30 முதல் 50 பேர் வரை மதுரையில் ‘கரோனா’ தொற்றுக்கு பாதிக்கப்பட்டால் அடுத்தடுத்த நாட்களில் சென்னையைப்போல் தினந்தோறும் 500 பேர் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அப்போது நிலைமை சிக்கலாகிவிடும். சாலை வழியாக மதுரைக்கு நுழைகிறவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். அவர்கள் பரிசோதனை செய்யப்பட வேண்டும். பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும் அவர்களைக் குறிப்பிட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
அதற்கு முன்போல் அவர்கள் வீட்டிற்கு ‘சீல்’ வைத்து ஸ்டிக்கர் முத்திரை ஓட்ட வேண்டும். மதுரையில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களை வெளிநோயாளிகள் யாருக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அனுமதிக்கவில்லை. அவர்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டும் ‘கரோனா’ பரிசோதனை செய்து கொள்கின்றனர். அரசே ஒரு புறம் அறுவை சிகிச்சை போன்ற அவசர சிகிச்சைகளுக்கு வருவோருக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்யக்கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது.
ஆனால், மறுபுறம் அரசே அவர்களை உள் நோயாளிகளை மட்டும் பரிசாதனை செய்துகொள்ள அனுமதிக்கிறது. அவர்களை வெளி நோயாளிகளுக்கும் பரிசோதனை செய்ய அனுமதித்தால் வசதிப்படைத்தவர்கள் அங்கு செல்வார்கள். நடுத்தர, ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யயலாம். அப்போது பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை தள்ளி வைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
தற்போது அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதே சவாலானதுதான். நோயாளிகள் 2 அல்லது 3 நாட்களாவது மருத்துவமனையில் இருக்க வேண்டும். நோய் பரவலுக்கு அது வாய்ப்பாகிவிடும். அதனால், தற்காலிகமாக ’காப்பர் டி’ போட்டுவிட்டால் 1 ஆண்டு கழித்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அதனால், அவசரமில்லாத அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கலாம்.
சென்னையை போல் நோயாளிள் எண்ணிக்கை அதிகரித்தால் மதுரை தாங்காது. இதேவேகத்தில் தொற்று அதிகரித்தால் 10 நாளிலேயே மதுரை ‘கரோனா’ வார்டுகளில் நோயாளிகள் நிரம்பிவிடுவார்கள். புதிய நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க இடம் இல்லாமல் போய்விடும்.
மதுரை மாவட்டத்தில் தற்போது அதிகமான நோயாளிகள் சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அதேநேரத்திலும் நோய் பரவலும் அதிகமாகியுள்ளது. நோயின் வீரியம் சற்று அதிகரித்தால் ‘கரோனா’ வார்டுகளில் பணிபுரியும் மருத்துவக்குழுவினருக்கு நெருக்கடி ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.