

தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில், வாரணாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாரணாசி தொகுதியில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார் பில் அஜய் ராயும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கேஜ்ரிவாலும் போட்டியிடுகின்றனர். அஜய் ராய் ராம்கந்த் நகர் வாக்குச்சாவடியில் திங்கள்கிழமை குடும்பத்துடன் வாக்குப்பதிவு செய்யச் சென்றார். அப்போது அவரது குர்தாவில் காங்கிரஸ் கட்சியின் ‘கை’ சின்னம் உள்ள ‘பேட்ஜ்’ அணிந்து சென்றார்.
இது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புகார் அளிக் கப்பட்டது. அத்தொகுதியின் தேர்தல் அதிகாரி பிரஞ்சல் யாதவ், தேர்தல் ஆணையத்தின் மேலிட பார்வையாளர் பிரவீண் குமாரிடம் புகார் அளித்தார். அவர் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அஜய் ராய் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 130-ன் படி, வாக்குப்பதிவு நடைபெறும்போது வாக்குச்சாவடிக்குள் தேர்தல் சின்னத்தை எடுத்துச் செல்தல், பிரச்சாரத்தில் ஈடுபடுதல் குற்றமாகும். இந்த பிரிவுகளின் கீழ் அஜய் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அஜய் ராய், “வேட்பாளர் என்ற முறையில் கட்சிச் சின்னத்தை அணிந்து செல்ல எனக்கு உரிமை உண்டு. என்னிடம் உள்ள அடையாள அட்டையில் கூட ‘கை’ சின்னம் உள்ளது” என்றார்.
பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர், இது ஒரு பெரிய விஷயமல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர்