

| இன்று சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் |
சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் கூற்றுப்படி (IUCN) உலகளவில் 77 சதவீதம் பறவைகள் அழியக்கூடிய நிலையில் உள்ளன. இந்தப் பட்டியலில் சிட்டுக்குருவியும் இடம்பெற்றுள்ளது.
அதனால், இந்த பறவையினத்தைக் காப்பாற்றவும், அதன் வாழ்வாதாரத்தால் மனித குலத்திற்கு கிடைக்கக்கூடிய நண்மைகள் பற்றியும் எடுத்துரைக்கவே ஆண்டுதோறும் சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் இந்த தினத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு, கரோனா அச்சுறுத்தல் காரணமாக பறவைகள் ஆர்வலர்கள் பலர் தாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல்துறை பேராசிரியரும், பறவையியல் ஆவலருமான ராஜேஷ் கூறுகையில் ”உலகளவில் குருவிகளில் 24 சிற்றினங்கள் உள்ளன. இதில், இந்தியாவில் 5 சிற்றினங்கள் உள்ளன.
சிட்டுக்குருவி ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த பறவை. இருப்பினும் குளிர் பிரதேசங்களைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் இந்த குருவி பரவியிருக்கிறது.
கடந்த 35 ஆண்டுகளில், சிட்டுக்குருவிகள் இனம் இந்தியாவில் 50 சதவீதமும், பிரிட்டனில் 60 முதல் 70 சதவீதமும் அழிந்துள்ளது. உலகளவில் சராசரியாக 70 சதவீதம் அழிந்துள்ளது.
1958-ம் ஆண்டில் சீனாவில் பஞ்சம் வந்தது. அந்த பஞ்சம் வந்தபோது எலி, கொசு, ஈ மற்றும் சிட்டுக்குருவி ஆகிய 4 உயிரினங்கள் காரணம் என்று சொல்லி அவற்றை அழிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. சிட்டுக்குருவிகளையும், அவற்றின் வாழ்விடங்களையும் அழித்தனர்.
ஆனால், அந்த பஞ்சம் மாறவில்லை. சீனாவின் தவறான முடிவும் உலகளவில் சிட்டுக்குருவிகள் அழிவுக்கு ஒரு காரணம். அதேபோல் உலகளவில் மக்களின் வாழ்க்கை முறையும் இந்த குருவி அழிவுக்குக் காரணம்.
நம் தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்வோமே, காரைவீடு, ஓட்டுவீடு, குடிசை வீடுகள் இருந்தபோது வீட்டிற்குள் இந்த குருவிகள் வருவதற்கான வழிகளும், தங்குவதற்கும், கூடுகள் கட்டுவதற்கும் இடைவெளிகள் இருந்தன. இன்று, நாம் கான்க்ரீட் கட்டிடங்களுக்கு மாறிவிட்டோம் சிட்டுக்குருவிகள் வசிப்பிடங்கள் இல்லாமலும் கணிசமாக அழிய ஆரம்பித்துவிட்டன" என்றார்.