

கடந்த 8 ஆண்டாக கால்நடை பராமரிப்புத் துறையில் 50 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இந்தப் பணி கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கான வாய் மற்றும் கால் காணை (கோமாரி) நோய் தடுப்பூசி பணிகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியது. தொடங்கிய இரண்டு நாட்களிலேயே மதுரை மாவட்டத்தில் இப்பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. பெரும்பாலான மாவட்டங்களில் இப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கால்நடைத்துறையினர் கூறுகையில், "கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் மாடுகளுக்கு காதுகளில் டோக்கன் அடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இது விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. மாடுகளை இன்ஸ்யூரன்ஸ் செய்யும்போது ஒரு டோக்கன், இலவசமாடு வழங்கும் போது ஒரு டோக்கன் இப்போது தடுப்பூசி போடும் போது ஒரு டோக்கன் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு டோக்கன் அடித்தால் ஒரு மாட்டின் காதில் எத்தனை டோக்கன் தான் அடிப்பது? என்று கால்நடை வளர்ப்போர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், காதில் டோக்கன் அடிப்பதால் சில மாடுகளுக்கு அலர்ஜியால் காதில் புண் ஏற்பட்டு இறுதியில் காதையே அறுத்து எடுக்கும் நிலை ஏற்படுகிறது.
விவசாயிகள் காதில் டோக்கன் போடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாலும், அது போன்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கு டோக்கன் அடிப்பதையும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் எதிர்ப்பு தெரிவிப்பதாலும் தடுப்பூசி பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கால்நடைத்துறையில் 50 சதவீத காலிப் பணியிடமாக இருப்பதால் பணிகள் நிறைவேறுவது கடினம் எனக் கூறுகின்றனர்.
கடந்த 8 ஆண்டுகளாக கால்நடைத் துறையில் சுமார் 50 சதவீதம்காலியாக உள்ள கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.
இதற்கென கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்முகத் தேர்வு வரை நடைபெற்று பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் விண்ணப்பப் படிவங்கள் பெற்று நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் பெற்று இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இலவச ஆடு, மாடு, கோழி வழங்கும் பணி, தீவன திட்டம், இவ்வாறு பல்வேறு திட்டப் பணிச்சுமைகளால் கால்நடைத் துறையில் பணிபுரியும் பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தடுப்பூசி போடும் மாடுகளுக்கு டோக்கன் அடித்து அதை கணிணியில் பதிவேற்றம் செய்து உடனுக்குடன் தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது" என்று அவர்கள் தெரிவித்தனர்.