

பழநியில் விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வதால் தங்க விடுதிகள் இன்றி சிரமப்படுவது தொடர்கிறது. பக்தர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு சார்பில் யாத்ரி நிவாஸ் அமைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை உள்ளது. தைப்பூசவிழா, பங்குனி உத்திரம், கார்த்திகை விழா, வைகாசிவிசாகம், கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் எனத் தொடர்ந்து விழாக்கள் நடைபெறுகிறது.
விழாக்காலங்களில் மட்டுமின்றி வாரவிடுமுறை நாட்கள் என ஏனைய நாட்களிலும் பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் பழநி மலைக்கோயிலுக்கு சென்று சுவாமிதரிசனம் செய்கின்றனர்.
தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் ஒருநாள் பழநியில் தங்கி தரிசனம் செய்தவதற்கு ஏதுவாக போதிய விடுதிகள் இல்லாததால் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பழநி கோயில் நிர்வாகம் சார்பில் சில விடுதிகள் இருந்தாலும், விழாக் காலங்களில் இவற்றில் தங்குவதற்கு குறைவான பக்தர்களுக்கே இடம் கிடைக்கிறது. மற்றவை பக்தர்களுக்காக பாதுகாப்பிற்கு வரும் போலீஸ் அதிகாரிகள், ஏனைய அரசு அலுவலர்கள், சிபாரிசுடன் வருபவர்கள் என தங்குவதற்கு ஒதுக்கப்படுகிறது.
பழநியில் உள்ள தனியார் விடுதிகளும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை. இதனால் விழாக்காலங்களில் பழநி வரும் பக்தர்கள் தங்க இடம் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்குள்ளாவது ஒவ்வோர் ஆண்டும் தொடர்கிறது.
இதனால், விழாக்காலங்களில் பல பக்தர்கள் கிடைக்கும் இடத்தில் பாதுகாப்பற்ற நிலையில் படுத்து உறங்கிச் செல்வதும் தொடர்கிறது. பக்தர்கள் பணம் செலுத்தி விடுதி அறைகள் எடுத்து தங்க தயாராக இருந்தநிலையிலும் அவர்களுக்கு அறைகள் கிடைக்காமல் உள்ளது.
இந்தநிலையை போக்க அறநிலையத்துறை கூடுதல் அறைகள் கொண்ட விடுதிகளை கட்ட முன்வரவேண்டும். இதற்காக அறநிலையத்துறைக்கு சொந்தமான பல காலியிடங்கள் உள்ளன.
யாத்ரி நிவாஸ்:
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது தொகுதியான திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு சார்பில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்க ஏதுவாக பல அறைகள் கொண்ட ‘யாத்ரி நிவாஸ்’ கட்டப்பட்டது. அதன்பின் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு முழுமையான வசதி கிடைத்தது.
எந்தவித சிபாரிசுக்கும் இடமின்றி யாத்ரி நிவாஸ்-ல் ஆன்லைன் பதிவு மூலம் அறைகள் முன்பதிவு செய்யப்படுகிறது. கட்டணமும் அதிகமின்றி உள்ளது. இரண்டு பேர் தங்கும் அறை, குழுவாக வருபவர்களுக்கென ஐந்துக்கும் மேற்பட்டோர் தங்கும் அறை, பத்து பேர் தங்கும் பெரிய அறை என பல்வேறு கட்டணங்களில் யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டுவருகிறது. இது பக்தர்களுக்கு வசதியான ஒன்றாக உள்ளது.
இதேபோல் பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் பழநியிலும் ‘யாத்ரி நிவாஸ்’ கட்ட தமிழக அரசு முன்வரவேண்டும். தமிழகத்திலேயே அதிகவருவாய் வரும் கோயிலான பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதற்கட்டமாக பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை நிவர்த்திசெய்யவேண்டும். இதற்கு கூடுதல் அறைகள் கொண்ட விடுதிகளைக் கட்ட அரசு முன்வரவேண்டும் என்பதே பழநி வரும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் விழாக்காலங்களில் பக்தர்கள் தங்க இடம் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கையாக ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் ‘யாத்ரி நிவாஸ்’ பழநியிலும் கட்ட கோயில் நிர்வாகமும், அரசும் முன்வந்தால் பக்தர்கள் தவிப்பைத் தீர்க்கலாம்.