கலைப்  பெட்டகம்  சரசுவதி  மகால்  நூலகம்

கலைப்  பெட்டகம்  சரசுவதி  மகால்  நூலகம்
Updated on
1 min read

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள சரசு வதி மகால் நூலகம் ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்று.

தஞ்சாவூரை ஆட்சி செய்த நாயக்கர்கள், மராட்டியர்கள் இந்த நூலகத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக இரண்டாம் சரபோஜி மன்னர் நூல்கள் மீது கொண்ட ஆர்வத்தால் நூலக வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தார்.

இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி, இந்தி மொழிகளில் 24,165 ஓலைச்சுவடிகளும், 23,169 காகிதச் சுவடிகளும், 1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுத்தப்பட்ட 3 லட்சம் மோடி ஆவணங்களும் உள்ளன.

பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட சாமுத்திரிகா நூலும், கிரந்த எழுத்தில் 24 ஆயிரம் சுலோகங்கள் கொண்ட முழுமையான வால்மீகியின் இராமாயண சுவடிகளும் உள்ளன. அத்துடன் அரியவகை மூலிகைகள், மருத்துவம் பற்றிய குறிப்புகளும், ஆன்மிகம், ஜோதிடம், ஓவியங்கள் உள்ளிட்டவை குறித்த நூல்களும் உள்ளன.

மன்னர் காலத்தில் மன்னரும், மன்னரின் குடும்பத்தினரும் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த நூலகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1918-ம் ஆண்டு அக்.5-ம் தேதி பொது நூலகமாக மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்றுவரை வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் பொதுமக்களின் பார்வைக்காக பல்வேறு ஓவியங்கள், ஓலைச்சுவடிகள், மன்னர்கள் போரின்போது பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை உள்ளூர் சுற்றுலா பயணிகள் முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரை நாள்தோறும் தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.
அதேபோல வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் தினமும் இங்கு வந்து சுவடிகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களை ஆதாரமாகக் கொண்டு ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டு வருவதால் தஞ்சாவூரின் கலைப் பெட்டகமாக சரசுவதி மகால் நூலகம் திகழ்கிறது எனலாம்.

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் மன்னர் காலச் சேகரிப்பின் அரிய நூல்கள், ஆங்கிலேயர் காலத்தில் கைகளால் வரையப்பட்ட அரிய ஓவியங்கள், ராமர் பாலத்தின் அரிய புகைப்படம், ஒரே மரப்பலகையிலான குரான் படிக்க உதவும் புத்தக ஸ்டாண்ட் உள்ளிட்ட பல பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

- வி.சுந்தர்ராஜ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in