

தஞ்சாவூர் நகரைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டு அம்மன் கோயில்கள் உள்ளன. ராஜராஜன் நகரை விட்டு வெளியே செல்லும் போது, இந்த அம்மன்களை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.
அந்தக் கோயில்களின் விவரம்: கீழவாசல் உக்கிர காளியம்மன் கோயில், மேலஅலங்கம் வடபத்திர காளியம்மன் கோயில், வல்லம் ஏகௌரி அம்மன் கோயில், வெண்ணாற்றங்கரை கோடியம்மன் கோயில், தெற்கு வீதி காளிகா பரமேஸ்வரி கோயில், வடக்கு வாசல் மகிஷாசுர மர்த்தினி கோயில், ராஜகோபாலசாமி கோயில் தெருவில் உள்ள காளியம்மன் கோயில், பூமால் ராவுத்தர் தெருவில் உள்ள நிசம்பசூதனி கோயில். இக்கோயில்கள் திசைக்கு ஒன்றாக எட்டு திசைகளில் உள்ளன.
அதேபோல, தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தைச் சுற்றிலும் அஷ்டதிக் பாலகர்களான இந்திரன், ஈசானியன், அக்னி தேவன், யாமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் ஆகியோரும், கோயிலின் நான்கு திசைகளிலும் உள்ள இரு பிரகாரங்கள் என 16 இடங்களில் உள்ள துவாரபாலகர்களும் பெரிய கோயிலை காவல் காத்து வருகின்றனர்.