

தஞ்சை நகரின் சிறிய கோட்டையின் தென்பகுதியில் மிகப்பரந்த வெளியில் இராஜராஜேச்சுவரம் என்ற பெரிய கோயில் அமைந்துள்ளது. அகழி, மதில், கோட்டைக் கொத்தளம் எனும் அமைப்புகள் சிறிய கோட்டையின் அரணாக விளங்குகின்றன. கிழக்குப் பகுதி அகழியில் கோயிலின் வாயிற்பகுதிக்கு நேர் எதிரே பிற்காலத்தில் மண் கொண்டு தூர்த்து சாலை அமைப்பை ஏற்படுத்தினர்.
தென்புற அகழியை கல்லணைக் கால்வாய் என்ற புதுஆற்றுடன் 1935-ம் ஆண்டு இணைத்துவிட்டனர். தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டபோது, சிறிய கோட்டையை அமைத்துபோது, இத்திருக்கோயிலின் ராஜகோபுரமான கேரளாந்தகன் திருவாயிலுக்கு நேர் எதிர்புறம் கோட்டைச்சுவர் வாயில் இன்றி மூடப்பட்ட நிலையில் இருந்தது. சிறிய கோட்டையின் வடகிழக்குப் பகுதி வாயில் வழியே கோட்டைக்குள் சென்று பின்பே கோயிலினுள்ளே நுழைய முடியும்.
இரண்டாம் மன்னர் சரபோஜி காலத்தில் கிழக்கு கோபுரவாயிலுக்கு எதிரே கொத்தளத்தின் ஒரு பகுதியையும், கோட்டைச் சுவரின் ஒரு பகுதியையும் அகற்றி ஒருவாயில் அமைப்பை ஏற்படுத்தினார். வளைவு ஒட்டுக்கூரையுடனும், பஞ்சமூர்த்திகளின் தெய்வ உருவங்களுடனும் இவ்வாயில் திகழ்கிறது.
இது, சரபோஜி வாயில் எனவும் அழைக்கப்படுகிறது. சிறிய கோட்டையின் வளாகத்தினுள் கோயிலுக்கு வடமேற்கில் சிவகங்கை எனும் திருக்குளம் உள்ளது.
கோட்டைச்சுவரும் கொத்தளத்தின் இருபுற சுவர்களும் செம்புறங் கற்களாலும், சில இடங்களில் கருங்கற்கள் கொண்டும் அமைத்துள்ளனர். அகழி, அதனுடன் ஒட்டித் திகழும் கோட்டைச்சுவர் ஆகிய இரு அரண்களுக்கும் அடுத்து நடுவில் பெரிய இடைவெளியோடு மூன்றாவது அரணாகிய கொத்தளம் காணப்பெறுகிறது. இக்கொத்தளத்தின் கிழக்கு வாயிலாகத் திகழ்வது தான் கேரளாந்தகன் திருவாயிலாகும்.
- வி.சுந்தர்ராஜ்