

நாம் எடுப்பித்த திருக்கற்றளி ராஜராஜேச்சுவரம் கல்வெட்டுகள் அறியப்படும் வரை புழங்கிய கதைகள் ஏராளம். விண்ணுலக அமானுஷ்யவாசிகளால் பெரிய கோயில் கட்டப்பட்டது எனவும், கிருமி கண்ட சோழனாகிய கரிகாலனால் கட்டப்பட்டது என்றும் அதனால் இங்குள்ள சிவகங்கைக் குளத்தில் நீராடி தன் குட்ட நோய் நீங்கப் பெற்றான் என பிரகதீ்ஸ்வர மகாத்மியம் வடமொழியில் எழுதியதை, மராட்டியர் கால தஞ்சைபுரி மகாத்மியமும் வழிமொழிந்தது.
காடுவெட்டிச் சோழன் கட்டினார் என்ன ஜி.யு போப் எழுதினார். இவற்றையெல்லாம் புறம்தள்ளி, ஜெர்மானிய ஹீல்ஸ் தான் 1886-ல் இக்கோயில் பேரரசன் ராஜராஜனால் கட்டப்பட்டது என்பதைக் கூறினார்.
1892-ல் வெங்கையா என்பவரால் தென்னிந்திய கல்வெட்டு மண்டலம் இரண்டாம் தொகுதி, பகுதி 4-ல் 98 வரிகள் கொண்ட முதல் கல்வெட்டு பதிவு வெளியிடப்பட்டது. அதில் 6-வது, 7-வது வரிகளில், ‘‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் என அண்மை அறிவித்தும், நாங் கொடுத்தனவும், அக்கன் (குந்தவை) கொடுத்தனவும், நம் பெண்டுகள் (அரச மகளிர்) கொடுத்தனவும் மற்றும் கொடுத்தார் கொடுத்தனவும் ஸ்ரீ விமானக் கல்லிலேயே வெட்டுக’’ என திருவாய்மொழியாக ஆணையிட்டார்.
எல்லா உண்மைகளையும் கூறும் சிறந்த கல்வெட்டாக அமைந்த ராஜராஜனின் கோயில், நிழல் சாயாத கோபுரம் என பேசப்படும் கதைகளுக்கும் இடம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது.
- வி.சுந்தர்ராஜ்