

தஞ்சைப் பெரியதளியின் தலைமை நிர்வாக பணியாகிய காரியம் செய்த பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூர்யனான தென்னவன் மூவேந்த வேளாண் என்பவர் 13 செப்புத் திருமேனிகளை கொடையாக அளித்து இருக்கிறார். அவற்றில் பெரிய பெருமாள் எனப்பட்ட ராஜராஜன் திருமேனியும், பெரிய பெருமாள் நம்பிராட்டியார் லோகமாதேவியர் எனும் பட்டதரசியின் திருமேனியும் அடங்கும். தென்னிந்திய கல்வெட்டு மண்டலம் தொகுதி இரண்டில் 38-வது கல்வெட்டாக இது பதிவு செய்யப்படுகிறது. ராஜராஜனின் 29-வது ஆட்சியாண்டில், அதாவது 1014-ம் ஆண்டுக்கு முன்பே இச்சிலைகள் கோயிலில் நிறுவப்பட்டன. இச்சிலைகளின் அளவுகள், எடை முதலியவையும் குறிக்கப்பட்டிருகின்றன. இக்கற்பொறிப்பின் 27-வது வரியிலிருந்து 34-வது வரி வரை கொடுக்கப்பட்ட விவரணைகள், ராஜராஜனின் சிலையை குஜராத் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன் காலிகோ அருங்காட்சியகத்திலிருந்து மீட்க பெரிதும் உதவின என்றால் அது மிகையல்ல.
-இரா.கோமகன், வரலாற்றாளர்,
தலைவர், கங்கைகொண்ட மேம்பாட்டுக் குழுமம்.