வரலாற்றுச் சின்னமான பெரிய கோயில்

வரலாற்றுச் சின்னமான பெரிய கோயில்
Updated on
1 min read

மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனால் கி.பி.1003-ம் ஆண்டில் கட்ட தொடங்கப் பெற்று, 1010-ம் ஆண்டில் நிறைவு பெற்ற தஞ்சை பெரிய கோயில், மகாமேருவின் அடிப்படையில் திட்டமிட்டுக் கட்டப்பட்டதாகும்.

3.66 மீட்டர் உயரம் கொண்ட லிங்க வடிவிலான சிவன், பெருமன்னன் ராஜராஜன் பெயரால் ராசராசேச்சுரமுடையார் என்று அழைக்கப்பட்டார். ஏறத்தாழ 50 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கற்களைக் கொண்டு 240 மீட்டர் நீளம், 120 மீட்டர் அகலம் கொண்ட பெரும் பரப்பில் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எட்டு துண்டுகளாக 81.284 டன் எடையுள்ள சிகரத்தை கொண்டதாக விளங்கும், இக்கோயிலின் விமானம் (கருவறை மேலுள்ள உள்ள கட்டடப் பகுதி) 60.96 மீட்டர் உயரம் கொண்ட பிரம்மாண்டமான படைப்பாக உள்ளது. சதுர வடிவிலான கருவறையைக் கொண்ட இக்கோயில் இரட்டை சுவர்கள் கொண்ட அடித்தளம் காரணமாக மேல் உயர்ந்து நிற்பது சாத்தியமாயிற்று.

கருவறையைச் சுற்றி வரும் வகையில் திருச்சுற்று அமைக்கப்பட்டு, திருச்சுற்று சுவர்களில் ஓவியங்களும், மேலடுக்கில் சிற்பங்களும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கருவறை நடுவிருக்க சுற்றிலும் சண்டிகேஸ்வரர், தேவி, சுப்பிரமணியர், விநாயகர், அரச குருவாம் கருவூர்தேவர் ஆகியோருக்கு தனித்தனியே சிறிய ஆலயங்கள் வெளித் திருச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ளன.

நந்திக்கு ஒன்றும், ஆடல்வல்லானுக்கு ஒன்றுமாக இரு மண்டபங்கள், சோழர் காலத்திலேயே கட்டப்பட்ட திருச்சுற்று மாளிகை, இராஜராஜன் திருவாயில், கேரளாந்தகன் திருவாயில் என்ற இரு வாயில்கள் அவற்றின் மீது கோபுரங்கள் ஆகியவற்றைக் கொண்ட பெரும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சின்னமாக விளங்குகிறது. மராட்டியர் ஆட்சிக் காலத்தில் வெளியில் வளைவு ஒன்றும் இணைக்கப்பட்டது.

கோயிலின் அடித்தளத்திலும் சுவர்களிலும் சோழர், பாண்டியர், விஜயநகரர், நாயக்கர், மராட்டியர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோயிலுக்கு அரசர்களும், அவர்தம் குடும்பத்தினரும், பிறரும் கொடுத்த கொடைகளும், நிறுவிய அறங்களும் தெரிய வருகின்றன.

பொன்னிலும், செம்பிலுமாக செய்து அளிக்கப்பட்ட இறைவனின் திருமேனிகள், கொடையாக வழங்கப்பட்ட பொன், பொருள், நிலம் இவை அனைத்தும் கோயிலில் நிர்வகிக்கப்பட்ட முறை ஆகியனவும் மிக விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கோயிலுக்கு வழங்கப்பட்டிருந்த நிலங்களில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரம் கலம் நெல் வருவாயாக வருவதற்கு வகை செய்யப்பட்டிருந்தது.

விமானத்தின் கீழ்தளக் கோட்டங்களில் விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவியுடனான திருமால், பிச்சாடனர், காலாந்தகர், ஆடல்வல்லான், உமையொருபாகர், சந்திரசேகர் உள்ளிட்ட பல்வேறு திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. மேல்தளக் கோட்டங்கள் அனைத்திலும் திரிபுராந்தக திருமேனிகளே அணி செய்கின்றன.

- வி.சுந்தர்ராஜ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in