

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
கட்சித் தலைமை பல்வேறு பெயர்களைப் பரிசீலித்து வருவதாகவும் விரைவில் மூத்த தலைவர்களில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் நாட்கள் உருண்டோடிய நிலையில் பிஹார் உட்பட பிற மாநிலங்களுக்கு, பாஜக மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், தமிழக பாஜக தலைவர் நியமனம் மட்டும் தள்ளிப்போனது.
இதனால் யார் தலைவர் என்ற பெரும் எதிர்பார்ப்பு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரிய அளவில் எழுந்துள்ளது.
(ஏ.பி.முருகானந்தம்- பாஜக இளைஞரணி தேசிய துணைத் தலைவர்)
பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன், மூத்த நிர்வாகிகள் குப்புராமு, சீனிவாசன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன் என பலருடைய பெயர்களும் தமிழக பாஜக தலைவர்களுக்கான பரிசீலனையில் இருப்பதாகக் கூறி அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த பாஜக இளைஞரணியின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்படலாம் என சில நாட்களக்கு முன்பு சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்திக்க அவர் டெல்லி விரைந்து இருப்பதாகவும் தகவல் வெளியானதால் தமிழக பாஜகவினரிடம் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.பி.முருகானந்தம் பெயரைக் கேட்டவுடன் தமிழக பாஜக வட்டாரத்தில் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.
ஊடகங்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக தகவல்கள் பரவின. ஏ.பி முருகானந்தம் பாஜக தலைமையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர் என்றும், பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு உள்ளவர் என்றும் வெவ்வேறு விதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இதற்கு ஆதாரமாக பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கமும் காட்டப்பட்டது. ‘‘பிரதமர் மோடியை ட்விட்டர் பக்கத்தில் 50.8 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி 2,300 பேரை மட்டுமே பின்தொடர்கிறார்.
அதில் தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் போன்ற மிக அரிதான நபர்களை மட்டுமே அவர் பின்தொடர்கிறார். விஜயதசமி முதல் ஏ.பி.முருகானந்தத்தை மோடி பின்தொடர்கிறார்’’ என செய்திகள் வெளியாகின.
இதையடுத்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் யாரையெல்லாம் பின்தொடர்கிறார் என்ற ஆராய்ச்சியில் இறங்கினோம். அதன்படி பார்த்தால் மிக அரிதான நபர்களை மட்டுமே பிரதமர் மோடி பின்தொடரவில்லை. பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரையும் அவர் பின்தொடர்கிறார்.
நடிகர் ரஜினி, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட பிரபலங்களை மட்டுமின்றி சாதாரண நபர்கள் சிலரையும் கூட அவர் ட்விட்டரில் பின்தொடர்வது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பாஜக முக்கிய நிர்வாகிகளைப் பொறுத்தவரையில் சுப்பிரமணியன் சுவாமி, நிர்மலா சீதாராமன், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானிதி சீனிவாசன், தமிழக பாஜக பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான முரளிதரராவ், தமிழக பாஜக முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ராஜூலு உள்ளிட்டோரை மோடி பின்தொடர்கிறார்.
செய்திகளில் வெளியானபடி ஏ.பி. முருகானந்தம் மடடுமல்லாமல், பாஜகவின் சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்கும் நாராயணன் திருப்பதி, கல்யாணராமன், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நடிகர் மாதவன், டெல்லியில் வசிக்கும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.ராஜகோபாலன், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை பிரதமர் மோடி பின் தொடர்கிறார்.
அதிகம் அறிப்படாதவர்கள் வரிசையில் வரலாற்று ஆர்வலர் சுதன் ராஜகோபால், திருவாரூர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் செல்வம், தாராபுரத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சுகுமார், சென்னையைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரும், பரத நாட்டியக் கலைஞருமான கிருத்திகா சிவசாமி, சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன், நாராயணன், அமெரிக்க வாழ் தமிழரான ராம்குமரன், ரங்கநாதன் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி ட்விட்டரில் பின் தொடர்கிறார்.
இதுமட்டுமின்றி தமிழக பாஜக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம், நாமக்கல் மாவட்ட பாஜக ட்விட்டர் பக்கங்களையும் அவர் பின் தொடர்கிறார்.