

நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி செய்வதில் மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டு வந்தது. அப்போது 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத்திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வும் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடித் தேர்வும் நடத்த வேண்டும். அந்தத் தேர்விலும் மாணவர்கள் தோல்வியடையும் பட்சத்தில் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு நாடு முழுவதும் 24 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து சட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்த முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடுகள் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவரப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
இதனால் இந்த விவகாரத்தில் நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மாணவர்கள் உயர்நிலை வகுப்பில் திணறுகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலத்துக்கும் சிக்கல் ஏற்படுகிறது. மாணவர் நலனைக் கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்கள் இடைநிற்றலை அதிகரிக்கச் செய்யும். பெண் குழந்தைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது இலவசக் கல்வியை முடக்கும் செயல். இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து உங்கள் கருத்து என்ன? விவாதிக்கலாம் வாருங்கள். உங்கள் கருத்துகளை விரிவாகப் பதிவு செய்யுங்கள்.