

மே 12-ம் தேதி வாக்குப் பதிவு முடிந்தபிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு களை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பொதுவாக சட்டமன்றம், மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பிறகு முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து ஊடகங்கள் தரப்பில் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் டெல்லியில் நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த தேர்தல் ஆணையர் எச்.எஸ். பிரம்மா, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16-ம் தேதி வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.இதனால் திடீர் குழப்பம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணை யம் சார்பில் உடனடியாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.
மக்களவைத் தேர்தல் இறுதி கட்ட வாக்குப் பதிவு மே 12-ம் தேதி நடைபெறுகிறது. அந்த வாக்குப் பதிவு முடிவடைந்தபிறகு அரை மணி நேரத்துக்கு மட்டுமே கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது. அதன்பிறகு கருத்துக் கணிப்புகளை வெளியிட தடையில்லை என்று ஆணைய அறிக்கையில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியபோது, ஆணையர் எச்.எஸ். பிரம்மா, தவறுதலான தகவலை வெளியிட்டுவிட்டார் என்று தெரிவித்தன.