

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மோடி அலை வீசினாலும் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால் இந்திய தேர்தல் வரலாற்றில் மிகக்குறைவான சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது இந்தத் தேர்தலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 3,234 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் மூன்றே பேர்தான் வெற்றியை ருசித்தனர். அதில் 2 வேட்பாளர்கள் கேரளா மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த இருவருக்கும் இடது முன்னணி ஆதரவு இருந்தது.
அசாம் மாநிலத்தின் கோக்ரஜார் தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நப குமார் சரானியா 3,55,779 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இடுக்கி மக்களவைத் தொகுதியில் ஜாய்ஸ் ஜார்ஜ் 50,542 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்தார்.
சாலக்குடி தொகுதியில் நகைச்சுவை நடிகர் இன்னொசன்ட் மூத்த காங்கிரஸ் தலைவர் சாக்கோவை 13,884 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் ஒட்டுமொத்தமாக 1.67 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். மொத்த வாக்குகளில் இவர்கள் பெற்றது 3% வாக்குகள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குகள் பகிர்வில் பாஜக 31% பெற்று முன்னிலை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 19.3%. திமுக 1.7% வாக்குகளையே பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் விழுக்காட்டை விடவும் திமுக குறைவாகப் பெற்றுள்ளது.