

விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிகளையே பிரதான உணவாகக் கொண்டு அவற்றை உண்பதன் மூலம் விவசாயம் செழிக்க உதவும் தேவாங்கு இனம் தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ளது.
தற்போது திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் எஞ்சியிருக்கும் தேவாங்கு இனத்தையாவது பாதுகாக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உருட்டும் உருண்டையான விழிகள், பாவமான பார்வை, இருட்டு வாழ்க்கை என இருக்கும் உயிரினம் தேவாங்கு. இது இரவில் நடமாடும் இரவாடி உயிரினம். இவைகளின் முக்கிய உணவு பூச்சிகள். அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அதிகம் பூச்சிகள் உருவாவதில்லை என்பதால் விளைநிலங்களை ஒட்டிய காட்டுப் பகுதிகளில் இவை வாழ்கின்றன.
மேலும் அதன் உணவுப் பட்டியலில் பறவைகளின் முட்டைகள், இலந்தைப் பழம், நாவல்பழம், ஆவாரம் பூக்கள், இலுப்பை பூ, அரசம்பழமும் உண்டு. தென்னிந்திய மாநிலங்கள், இலங்கையில் வாழும் ஓர் அழியும் நிலையில் உள்ள உயிரினம். இதில் 6 இனங்கள்உள்ளன. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இவை வாழ்கின்றன.
தேவாங்குகள் நீர்நிலைகளை ஒட்டியே வாழும். நீர்நிலைகளில் கைகளை நனைத்து அதை நாக்கால் நக்கி தண்ணீர் அருந்துவதால் தண்ணீர் தேவை மிகவும் குறைவு. குரங்குகள் மாதிரி இது குழுக்களாக வாழும் தேவாங்கின் தொடர்பு மொழி விசில் சத்தம். இவை 6 முதல் 8 வகையான சத்தங்களை எழுப்புகின்றன. மனிதனால் ஆபத்து வரும்போது அதற்கென தனிசத்தம் எழுப்புகின்றன.
வித்தியாசமான தோற்றம் கொண்ட இந்த வகை உயிரினம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இதுகுறித்து காரைக்குடியைச் சேர்ந்த மருத்துவரும், சூழலியல் ஆர்வலருமான எம்.மணிவண்ணன், "தேவாங்கின் இறைச்சி மருத்துவ குணமுள்ளது, அதை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்ற மூட நம்பிக்கைகளால் இவை அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. முன்பு கயிறு மந்திரிக்கவும், ஜோதிட சீட்டெடுக்கவும் பயன்படுத்தப்பட்டன. இவை பெரும்பாலும் விளைநிலங்கள் ஒட்டியே வாழ்கின்றன. அங்குள்ள மரங்கள் வெட்டப்படுவதால் வாழவழியின்றி அழிந்து வருகின்றன.
பகலில் பனை மரங்களில் பதுங்கி இரவில் இறங்கி வந்து பூச்சிகளை வேட்டையாடுகின்றன. தேவாங்கு காட்டுப் பூனைகளின் முக்கிய உணவு. எனவே இந்த இனம் அழிந்தால் காட்டுப் பூனைகளும் அழியும்.
இதனால், விவசாயத்தில் பூச்சிகள் பெருகும், விவசாயம் அழியும். ஓர் உயிர்ச்சூழல் மண்டலம் முற்றிலும் அழியும். எனவே, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் மிச்சமிருக்கும் தேவாங்குகளைப் பாதுகாக்க வேண்டும். என்றார்.