

புதிதாக உருவாக உள்ள சீமாந்திராவில் முதன்முதலில் ஆட்சியைக் கைப்பற்றப் போவது தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவா அல்லது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியா என்பது குறித்து தற்போது கோடிக் கணக்கில் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் வரும் ஜூன் 2-ம் தேதி இரண்டாகப் பிரிய உள்ளது. அன்றைய தினம் நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா உதய மாகப் போவதால் மீதமுள்ள கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகியவை (சீமாந்திரா) ஆந்திரப் பிரதேசம் என அழைக்கப்பட உள்ளது.
தெலங்கானா, சீமாந்திரா பகுதிகளில் சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் தெலங்கானாவில் காங்கிரஸ்-தெலங்கானா ராஷ்டிர சமிதி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதேபோன்று சீமாந்திராவில் ஆட்சி அமைப்பதில் தெலுங்கு தேசம்-ஒய்.எஸ்.ஆர். கட்சி களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
தேர்தல்கள் முடிந்த நிலையில் தற்போது சீமாந்திராவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என கட்சித் தொண்டர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் கோடிக் கணக்கில் பந்தயம் கட்டி வருகின்றனர். பிரியாணி, மதுபானம், விருந்து என பந்தயங்கள் தொடங்கி பைக், கார், பஸ் பர்மிட்கள், வீட்டு நிலம், வீட்டு பத்திரங்கள் என கோடிக் கணக்கில் பந்தயம் கட்டி வருகின்றனர்.
குறிப்பாக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைப்பது தொடர்பாக சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் இதுவரை பந்தயங்கள் கட்டப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. புலிவேந்தலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என அதிக தொகைக்கு பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.
இதே போன்று 90 முதல் 110 தொகுதிகளைக் கைப்பற்றி தெலுங்கு தேசம் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியினர் பந்தயம் கட்டி வரு கின்றனர்.
இதே போன்று சந்திரபாபு நாயுடு பெறும் வாக்குகள் குறித்தும் நடிகர் பாலகிருஷ்ணா, நடிகைகள் ரோஜா, விஜயசாந்தி ஆகியோரின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் புரோக்கர்கள் மூலமும் தனிப்பட்ட முறையிலும் பந்தயம் கட்டப்படுகிறது. இதில் அதிகமாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில்தான் மிக அதிக அளவில் பந்தயங்கள் கட்டப்பட்டு வருகிறது. இவர்கள் 130-140 சட்டமன்ற தொகுதிகளையும் 20-22 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றுவோம் எனும் நம்பிக்கையில் உள்ளனர்.