

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறவைத்த தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் 37 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெறச் செய்துள்ளனர். தங்களுடைய முழுமையான நம்பிக்கையை என் மீது வைத்துள்ளனர். ஊழல் புரையோடிய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் துரோகச் செயல்களுக்கு துணை போன தி.மு.க.வை விரட்டி அடிக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் நான் தமிழக மக்களிடம் கோரிக்கை விடுத்தேன்.
ஆலந்தூர் இடைத்தேர்தலிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை மக்கள் அமோக வெற்றி பெற வைத்துள்ளனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தனிக் கட்சியும் பெறாத அளவுக்கு, 37 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நான்காம் ஆண்டில் எனது ஆட்சி காலடி எடுத்து வைக்கும் நன்னாளில் தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மூலம் நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு உழைத்த அதிமுக தொண்டர்கள், அனைத்து தோழமை கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.