

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனையில் குண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக் கிழமை) நடக்கி றது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புதன் கிழமை இரவு 12.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ‘‘சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களான அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி மற்றும் சென்னை அரசு மருத்துவமனை, எழும்பூர் ரயில் நிலையம் ஆகிய 5 இடங்களிலும் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு குண்டு வெடிக்கும்’’ என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.
இதையடுத்து, வாக்கு எண்ணும் 3 மையங்கள் உள்பட 5 இடங்களிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. ஆனாலும், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது.
இதற்கிடையில், செல்போனில் இருந்து மிரட்டல் அழைப்பு வந்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், குரோம்பேட்டையை சேர்ந்த தமுமுக பிரமுகரின் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு அவரது வீட்டு முகவரியில் சிம்கார்டு வாங்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடம் போலீ ஸார் விசாரித்தனர். அந்த செல்போன் எண்ணை தான் வாங்கவே இல்லை என்று அவர் கூறினார். அவரை சிக்க வைக்கும் நோக்கில் மர்ம நபர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
3 அடுக்கு.. 26 ஆயிரம் போலீஸார்
சென்னை மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதி கூறியதாவது:
வாக்கு எண்ணும் மையங்களில் 22 ஆயிரம் போலீஸார், 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், 2,200 இளைஞர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய இடங்களில் வீடியோ எடுக்கப் படுகிறது.
ஒவ்வொரு மையத்திலும் ஒரு கூடுதல் ஆணையர், ஒரு இணை ஆணையர், 3 துணை ஆணையர், 12 உதவி ஆணையர், 30 ஆய்வாளர்கள், 100 உதவி ஆய்வாளர்கள், 700 சட்டம் ஒழுங்கு காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர், 2-வது அடுக்கில் மாநில ஆயுதப் படையினர், 3-வது அடுக்கில் சென்னை போலீஸார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.