

பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று மத்திய பிரதமர் அலுவலக இணையமைச்சர் வே. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி யம்மனை தரிசிக்க மத்திய பிரதமர் அலுவலக இணையமைச்சர் வே. நாராயணசாமி வெள்ளிக்கிழமை வந்திருந்தார். தரிசனத்துக்குப்பின் நம்மிடம் கூறியதாவது:
மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் அவரது தேர்தல் பிரச்சார பேச்சில் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதை தெரிவிக்க மறந்து, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை விமர்சித்துக்கொண் டிருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் என்ன செய்வோம் என்பதை கூறி வருகிறோம்.
மோடி தேர்தல் விதிகளை மீறி, ராமர் பாலத்தின் படத்தை பிரச்சார மேடையின் பின் பகுதியில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்கிறார். இதனால் தேர்தல் ஆணையம் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறது. தேர்தல் ஆணையத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இது இத்தேர்த லில் பாஜக தோல்வி பயத்தி லும், விரக்தியிலும் இருப்பதையே காட்டுகிறது. தேர்தல் ஆணை யத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் மோடி, பிரதமர் பதவிக்கே தகுதி இல்லாதவர்.
கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பான உதயகுமாரின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு அறிவியல் அறிஞர்கள் பங்கேற்ற குழு அளித்துள்ள 15 நிபந்தனைகளில் 13-ஐ மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு விவரங்களை புத்தகமாக அச்சிட்டு வழங்க வேண்டும் ஆகிய 2 நிபந்தனைகளை மத்திய அரசு விரைவில் நிறைவேற்றும். இந்நிலையில் உதயகுமார் போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். போராட்டம் நடத்த முடிவு செய்தவர்களை எந்த நீதிபதியாலும், விஞ்ஞானியாலும் திருத்த முடியாது, தடுக்கவும் முடியாது. முல்லை பெரியாறு விவகாரத்தில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை கேரள அரசு ஏற்க வேண்டும் என்றார்.